Connect with us

செய்திகள்

ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது! சசிகலா அழைப்பு!

Published

on

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.

தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.

கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்.

இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆராம்பித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே. மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மேலும், இதன் காரணமாக தமிழக மக்களும் திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே. திமுகவினரின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காத்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை எளிய சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும். புரட்சித்தலைவிக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று. ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னுடைய குறிக்கோள் கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சித்தலைவி அம்மா அவர்களை போலவே எனக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித சுய விருப்பு, வெறுப்புகளும் இருந்தது கிடையாது. எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரத்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி விடவேண்டும், அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். இதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால், என்ன நடந்தது?. தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சித்தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும், அதனால் கட்சிதான் முக்கியம். தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே, எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும், தமிழக மக்களும்தான் முக்கியம். இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது. தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ரயும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள். நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுக்காகவும், ஒன்றிணைவோம் வாருங்கள். கழக தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. இனி வரும் காலம் நமக்கானது. நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே” என கூறியுள்ளார்.

 

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கோவையில் பிரம்மாண்ட “Agri & Poultry Expo 2026”

Published

on

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் “அக்ரி & போல்ட்ரி எக்ஸ்போ 2026” எனும் மாபெரும் விவசாய கண்காட்சி வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

கண்காட்சியின் விழா தொடக்க நிகழ்ச்சி பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 12.05 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட தலைவர் திரு. G.K. நாகராஜ் – மாநில தலைவர், பி.ஜே.பி. விவசாய அணி – அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், ஒன்றிய குழு தலைவர் திரு. K. சரவணன், ஒன்றிய குழு செயலாளர், அன்னூர் வட்டம், அ.தி.மு.க., President அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அன்னூர், மற்றும் – கோவை, திரு. ஏர்வேந்தர் N. தண்டபாணி – மாவட்ட தலைவர் – கோவை தமிழ்நாடு விவசாய சங்கம் (பதிவு எண் : 261), திரு. G.K. விவசாய மணி (எ) G. சுப்ரமணியம் அவர்கள் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு விவசாய மற்றும் தொழில் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த கண்காட்சியில் நவீன வேளாண் இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள், விவசாய உபகரணங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

அன்னூர் ரோட்டரி சங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிரைடு இவென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதுடன், தின இதிகை ஊடகமாக இணைந்து செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 9384265548, 9384177789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று (05.02.2026) நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரத்தைத் துவங்கிய ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

Published

on

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், ஐ.பி.எஸ். கலந்து கொண்டு, சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கத்தையும், இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், புற்றுநோயின் கடுமையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது, சிகிச்சையை மேம்படுத்துவைத்து மற்றும் சமூகத் தடைகளை நீக்குவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் தனித்துவத்தால் ஒன்றிணைவோம் (United by Unique) என்பதாகும். இது மனிதநேய அடிப்படையிலான புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சமாக இருந்த பாதிப்பு 2025-ஆம் ஆண்டில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பாதிப்பின் படி, 2021-ஆம் ஆண்டில் 1,07,000 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான தரவுகளில் சென்னை முதல் இடத்திலும், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் அடுத்தடுத்த இடங்களிலும், கோயம்புத்தூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கோவையில் ஆண்களிடையே அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதில் வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அடங்கும். பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு படி, இந்தியாவில் புற்றுநோய் பரிசோதனை விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 1.9% மட்டுமே நடைபெறுகிறது; மார்பக புற்றுநோய் பரிசோதனை 0.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டில், கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 4.8% மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை 9.8% ஆகும். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 70–80% பரிசோதனை இலக்கை விட மிகவும் குறைவாகும்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை ஆரம்பகாலதிலேயே கண்டறிய உதவக்கூடிய பரிசோதனைகள் இன்று மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.

இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் “ஆரம்ப கட்ட கண்டறிதல் சிகிச்சைக்கு வழிவகுக்கும்” என்ற செய்தியை முன்னெடுக்கும் வகையில் மார்பக புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட 14 வகையான புற்றுநோய்களை மையமாகக் கொண்டு சமூக ஊடக விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை நடத்துவதாகவும், இது தொடர்ந்து 20-ஆவது ஆண்டாக புற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் முயற்சியாகும், என்றார்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதனால் இது தொடர்பான விழிப்புணர்வை இந்த மாதம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளோம். இதில் 14 வகையான புற்று நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.”என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், இன்றைய காலகட்டத்தில் நல்ல செய்திகளை விட தேவையில்லாத மற்றும் தவறான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதாக கவலை தெரிவித்தார். குறிப்பாக புற்றுநோய் குறித்த தகவல்கள் சமூகத்திலும் பள்ளிகளிலும் குணப்படுத்த முடியாத நோயாக தவறாக காட்சிப்படுத்தப்படுவதாகவும், அதிலும் ரத்தப் புற்றுநோய் தொடர்பான செய்திகள் அதிகம் பரவுவதாகவும் கூறினார்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் தகவல்கள் உடனடியாக மக்களிடம் சென்று சேர சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அந்த தகவல்கள் உண்மையானதும் நம்பகத்தன்மை கொண்டதும் ஆக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் ஒரு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது, அந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதையே காட்டுகிறது என்றும், அதனை சரி செய்ய அதிக அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

புற்றுநோய் குறித்த தவறான தகவல்கள் தற்போது பரவி வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு முயற்சி முக்கியமானதாக இருக்கும் என்றார். மருத்துவர்கள் மூலம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் போது அதற்கு அதிக நம்பகத்தன்மை உருவாகும் என்றும், புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு செல்ல இயலாத மக்களுக்கு உதவுவது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கும் என்றும் கூறினார்.

விழிப்புணர்வை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் தாக்கத்தை குறைக்க முடியும். சரியான புரிதல் இல்லாததே நோயின் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் முழுமையாக குணப்படுத்தக் கூடியவை என்றும், சரியான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து மீண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நல்ல முன்னெடுப்பு முயற்சி வெற்றியடைய ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பார்கவி நன்றியுரை ஆற்றினார்.

இந்த முயற்சிகளின் மூலம், புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பரிசோதனை ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.எஸ்.நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி திரு.சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு.டி.மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

Continue Reading

Trending