Connect with us

உள்ளூர் செய்திகள்

கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கம்

Published

on

கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நீண்டகால மேல்குடல் அறிகுறிகள், குறிப்பாக ஜீரணக்குறைபாடு தொடர்பான நோய்களை அறிவியல் அடிப்படையில் துல்லியமாக மதிப்பீடு செய்து சிகிச்சையளிக்கும் புதிய முன்னேற்றமாக இந்த சென்டர் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன் ; ஆஸ்திரேலியா அரசின் சட்டத்துறை தலைமை வழக்கறிஞரின் உதவி அமைச்சர் யாஸ் முபாரகாய் ; ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

டிஸ்பெப்சியா சென்டர் குறித்து மூத்த குடலியல் நிபுணர், கல்லீரல் நிபுணர் மற்றும் எண்டோஸ்கோப்பி நிபுணர், விஜிஎம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறுகையில்,

ஜீரணக்குறைபாடு உலகளவில் 20 முதல் 30 சதவீத மக்களை பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இதில் சுமார் 20 சதவீத நோயாளிகளில் மட்டுமே தெளிவான காரணம் கண்டறியப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலானவர்களுக்கு காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் முழுமையான ஆய்வுகள் இல்லாமல் பொதுவான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

விஜிஎம் மருத்துவமனையில் 2022 முதல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 839 காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இதில் 55 சதவீதம் ஆண்கள் ஆகும். இவர்களில் 52 சதவீத பேருக்கு ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள நோயாளிகளில் மூச்சுப் பரிசோதனைகள் மற்றும் எலக்ட்ரோகாஸ்ட்ரோகிராஃபி போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் மூலம் பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன.

பொதுவாக நீடித்த ஜீரணக்குறைபாடு அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு எண்டோஸ்கோப்பி மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை சாதாரணமாக இருந்தால், காரணம் தெரியாத நிலை என கருதி பொதுவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையை மாற்றும் வகையில், விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர் காரண அடிப்படையிலான துல்லியமான நோயறிதல் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மையத்தில் ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்றை கண்டறிய கதிர்வீச்சு இல்லாத மூச்சுப் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கார்போஹைட்ரேட் உணவுகளை ஜீரணிக்க முடியாத நிலை, சிறுகுடல் பாக்டீரியா அதிகரிப்பு, வயிற்றின் இயக்கக் குறைபாடு போன்ற பல மறைந்த காரணங்களை கண்டறிய நவீன பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, குடல் மைக்ரோபையோம் ஆய்வு மற்றும் தனிப்பட்ட உணவு முறைகள் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் அவர் பேசுகையில், எதிர்காலத்தில் ஜீரணக்குறைபாடு போன்ற செயல்பாட்டு குடல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அறிகுறிகளை மட்டுமே கவனிப்பது போதுமானதல்ல; அதன் அடிப்படை காரணங்களை கண்டறிவதே முக்கியம் என வலியுறுத்தினர்.

பொதுமக்கள் மேல்பகுதி வயிற்று அசௌகரியம், வயிறு வீக்கம், விரைவில் பசியாறுதல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை சாதாரண காஸ்ட்ரிடிஸ் என கருதி புறக்கணிக்காமல், துல்லியமான பரிசோதனைகள் மூலம் சரியான சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலேசியா நியூரோ மோட்டிலிட்டி சங்க மாநாடு மற்றும் இந்திய நியூரோ மோட்டிலிட்டி சங்க மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

வி.ஜி.எம். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி; மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன்; கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகளாவிய வழிகாட்டுதல்களை பின்பற்றும் நவீன நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து, விஜிஎம் டிஸ்பெப்சியா மையம் இந்தப் பிராந்தியத்தில் சர்வதேச தரத்திலான குடலியல் சேவையை வழங்கி, நீண்டகாலமாக பூர்த்தியாகாத மருத்துவ தேவைகளை நிறைவேற்றும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தாராபுரம் சந்திராபுரத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையம் துவக்கம்

Published

on

ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர்.மகாலிங்கம் ஐயா அவர்களால் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. நிறுவனர் ஐயா அவர்கள் தனது நிறுவனங்களை வணிகரீதியாக மட்டுமின்றி. விவசாயிகளின் வாழ்க்கை தர மேம்பாடு, சமூக, சமுதாய மேம்பாடு. ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிலும் தமது சிந்தனையாற்றல் மூலம் எதிர்கால இந்தியாவைப்பற்றியும், இளைஞர்களை கல்வி பயிலும் பொழுதே தொழில் முனைவோராக மாற்றிட வழிவகுத்தவர். அவரது கால்தடங்களை தவறாது, பிறழாது பின்பற்றி அவரது முயற்சி, சிந்தனைகளின், கனவுகளின் நீட்சியாக ஐயா அவர்களது புதல்வர் திரு.ம.பாலசுப்பிரமணியம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதுதான் இன்று துவக்க விழா காணும் ஏபிடி சொசைட்டி ஆகும்.

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் விவசாயத்தின் மீது நாட்டம் வெகுவாக குறைந்துவருகின்றது. கிராமப்புற கூலி ஆட்கள் நகர்புற கட்டுமானப் பணிகளுக்கும், ஜவுளி தொழில்களுக்கும் நகர்ந்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாலும், மாறி வருகின்ற பருவநிலை மாற்றங்களாலும், விளைவிக்கின்ற விலைப்பொருட்களுக்கு போதிய விலை கிட்டாததாலும், கிராமப்புற விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்று வருமானங்களை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகின்றது. இத்தகையச் சூழலில், தனிப்பட்ட ஒரு பயிர் மூலம் அல்லது தனிப்பட்ட விவசாயம் சார்ந்த ஒரு தொழில் மூலமாகவும் ஈட்டுகின்ற வருமானம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து, ஏபிடி சொசைட்டி நவீன விஞ்ஞான முறைகளை பின்பற்றி பயிர்களின் மகசூலை உயர்த்துவதோடு “ஒருங்கிணைந்த பண்ணைய முறை” என்பதை கருத்திற்கொண்டு இந்த ஏபிடி சொசைட்டி துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் வருவாய் ஈட்டும் வகையில் காய்கறி பயிர், கால்நடை மூலம் அதிக பால் உற்பத்தி, கோழி,ஆடு,மீன், காளான், தேனி வளர்ப்பு போன்றவற்றின் மூலமும், ஓராண்டு பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றையும், அதிக நிலப்பரப்புடையவராக இருப்பின் பழ வகை பயிர்களையும், நவீன விஞ்ஞான உத்திகளை, விவசாயிகளுக்கு போதுமான பயிற்சிகள், மாதிரி வயல் அமைத்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்திடவும், வருவாயை மேம்படுத்திடவும். ஏபிடி சொசைட்டியின் சேவை மையம் துவக்கப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் தரமானதாக வழங்கிட ஏபிடி சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி வழங்கிட ஒற்றை ஆசிரியர் வகுப்பறைகளும், கிராமப்புற பெண்களின் நலனுக்காக அவர்களை இளம் தொழில் முனைவோராக மாற்றிட அனைத்து வாய்ப்புகளையும், சூழல்களையும் ஏற்படுத்திட ஏபிடி சேவை மையம் முனைந்துள்ளது.

மேற்கண்ட உன்னதமான திட்டங்களையும், எதிர்கால விவசாயத்தை லாபகரமாக மாற்றிடவும், விவசாயிகள் விவசாயத்தில் நிலைத்து நீடித்திடும் வகையிலும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு முன்பாக அதற்கெல்லாம் ஆதாரமாக, சாட்சியமாக நிரூபணம் செய்யும் வகையில் “ஏபிடி சொசைட்டி” மற்றும் “ஏபிடி சேவை மையம்” சந்திராபுரம் கிராமத்தோடு கொண்டுள்ள நீண்ட, நெடிய உறவுகளை கருத்திற்கொண்டு இக்கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி அமைத்திட மேற்கொண்ட முயற்சியின் துவக்கப்புள்ளிதான் இந்நிகழ்வின் துவக்க விழா.

இந்த விழாவை சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் திரு.ம. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை ஏற்று பெருமகிழ்வுடன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருமதி.வினோதினி பாலசுப்பிரமணியம், திருமதி.சம்யுக்தா சங்கர் வாணவராயர் ,செல்வி.சுருதி, திரு.அம்ரித் விஷ்ணு, மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், சந்திராபுரம் ஏபிடி சேவை மையத்தின் அலுவலர்களும், ஊழியர்களும், சந்திராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் பேசும்பொழுது தங்களது கிராமத்தில் ஏபிடி சொசைட்டியின் வருகை தங்களுக்கு பெருமகிழ்ச்சியையும், பலன் உள்ளதாக அமையும் என்பதாலும் தங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தமிழின் பெருமையை அறிய கோவையில் கூடும் வடமாநில மாணவர்கள்

Published

on

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வித்யா பாரதி உச்ச கல்வி சன்ஸ்தான் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “லெர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” தொடங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள், தமிழ்மொழி, அதன் தொன்மை, பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 10 நாள் பயிற்சி முகாமான “லேர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” (Learn Bharatiya Bhasha Internship Programme 2.0) இரண்டாம் பதிப்பில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SKASC) வந்தடைந்துள்ளனர்.இந்தப் பயிற்சி திட்டத்தை கல்லூரி நிர்வாகம், வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனம் மற்றும் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. கனகசபாபதி கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“மொழி என்பது சமூகங்களுக்கிடையே கருத்துகள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு பாலமாக விளங்குகிறது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியப் பண்பாட்டின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் செழுமையான இலக்கிய மரபைக் கொண்டுள்ளது.

சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழ் இலக்கியம், நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல மொழிகளைக் கற்றுக்கொள்வது சிக்கல்களைத் தீர்க்கும் திறன், சூழலுக்கு ஏற்ப தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் பண்பாட்டு புரிதலை மேம்படுத்துகிறது. பன்மொழித் திறன், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது தாய்மொழியைத் தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது” என்றார்.

வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனத்தின் தேசிய அமைப்புச் செயலாளரும் சிறப்பு விருந்தினருமான கே.என். ரகுநந்தன், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கவுன்சிலின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. சுந்தரமூர்த்தி விளக்கமளித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகளவில் தமிழ்ப் பாரம்பரியம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பதோடு, இத்தகைய திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும் பண்பாட்டு புரிதலையும் மேம்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெகஜீவன் வரவேற்புரை ஆற்றி, “மாணவர்கள் தமிழை ஒரு மொழியாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகத்தின் அடையாளமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆர். விஜயசமுந்தேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

Trending