சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டுக்குப் பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு முதல் தமிழகத்தில் மீதமுள்ள, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்வு.
கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்த அறிக்கையில், “நெடுஞ்சாலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது. சுங்கச்சாவடி எண்ணிக்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்தி மக்களை பரிதவிக்கச் செய்யக்கூடாது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.