பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’என்ற நடைப்பயணதின் பொது மக்களிடம் இருந்து புகார் பெற ‘விடியல, முடியல’ என்ற புகார் பெட்டி ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியினை பொன் ராதா கிருஷ்ணன்,நயினார் நாகேந்திரன், எச்.ராஜா , வானதி ஸ்ரீனிவாசன் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ” தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதை வரும், 28ம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கிறார். அன்று, ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடக்கும். அதில், ராமேஸ்வர தீர்மானங்கள் வெளியிடப்படும். அதில், தமிழக பா.ஜ., வரும் ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் இடம்பெறும். முதல் கட்டமாக, ராமேஸ்வரத்தில் துவங்கும் பாதயாத்திரை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். ஐந்து கட்டங்களாக நடக்கும் யாத்திரை, ஜனவரியில் சென்னையில் முடிவடையும். தி.மு.க.,வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். பாத யாத்திரை, 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அண்ணாமலை நடந்தும், வாகனத்தில் சென்றும் மக்களை சந்திப்பார். பாத யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.