Connect with us

செய்திகள்

ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது! சசிகலா அழைப்பு!

Published

on

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.

தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.

கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்.

இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆராம்பித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே. மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மேலும், இதன் காரணமாக தமிழக மக்களும் திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே. திமுகவினரின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காத்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை எளிய சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும். புரட்சித்தலைவிக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று. ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னுடைய குறிக்கோள் கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சித்தலைவி அம்மா அவர்களை போலவே எனக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித சுய விருப்பு, வெறுப்புகளும் இருந்தது கிடையாது. எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரத்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி விடவேண்டும், அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். இதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால், என்ன நடந்தது?. தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சித்தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும், அதனால் கட்சிதான் முக்கியம். தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே, எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும், தமிழக மக்களும்தான் முக்கியம். இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது. தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ரயும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள். நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுக்காகவும், ஒன்றிணைவோம் வாருங்கள். கழக தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. இனி வரும் காலம் நமக்கானது. நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே” என கூறியுள்ளார்.

 

 

 

 

 

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக்கான நிறுவனம் விருது!

Published

on

பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (NITTTR) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், இந்த விருதை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 58 வது ஆண்டு விழாவில் பெற்றுக்கொண்டது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ம.அசோக் மற்றும் விரிவுரையாளர் G.கதிரேஸ்குமார் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ம.மாணிக்கம் மற்றும் தலைவர் மா.ஹரிஹரசுதன் ஆகியோர் இச்சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue Reading

செய்திகள்

அபராத தொகையைக் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்!

Published

on

விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை.

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராதம் மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் முறையும் விதிக்கப்படுகிறது.

அதன் அபராதத்தொகையே இணையத்தளம் மூலம் கட்டும் வசதி இருந்தாலும் அதை செலுத்த பலரும் தவறுவதால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை சுமார் ரூ.300 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய நடைமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

Trending