கோயம்பத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி ஏஐஜென்திக்ஸ் ஒப்பந்தம்

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு, புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 22.06.2026 (திங்கட்கிழமை) இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் டாக்டர் சலூர் ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவர்களுக்காக ஐந்து பருவங்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நிறைவில், ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் வழங்கும் ஜென்ரேட்டிவ் ஏஐ சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
உலகளவில் அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ள ஜென்ரேட்டிவ் ஏஐ, மருத்துவம், நிதி, கல்வி மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் முன்னோடியான செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணத்துவத்தைப் பெறுவார்கள்.
இந்த சான்றிதழுடன் கூடுதலாக, மாணவர்களுக்குத் தொழில்துறைக்கு ஏற்ப பொருத்தமான செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள், நேரடி திட்டங்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களை பெற முடியும்.
மேலும், கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கிடையேயான இடைவெளியை குறைத்து, மாணவர்கள் நடைமுறை அனுபவத்தையும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜென்ரேட்டிவ் ஏஐ சான்றிதழும், தொழில்துறை சார்ந்த நேரடி அனுபவங்களும் இணைந்து, மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரித்து, பணிவாய்ப்புத் தேர்வுகளில் அவர்களின் வாய்ப்புகளை வலுப்படுத்தி, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழலில் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்குத் தயார்படுத்தும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான டாக்டர் அர்பித் யாதவ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆலோசகரான திரு. ஊர்வஸ்க் தஸ்தூர், பிசிஏ ஏஐ துறைத்தலைவர் ஜினி ஜேம்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Click to comment

Trending

Exit mobile version