Connect with us

கோயம்பத்தூர்

கோவை சிறுதுளி அமைப்பின் மூலம் சோழிங்கநல்லூர் ஏரி மறுசீரமைப்பு !

Published

on

கடந்த 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிறுதுளி அமைப்பு, இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சென்னை சோழிங்கநல்லூர் ஏரி மறுசீரமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி , நீர்வளத் துறை மற்றும் பிற அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

சென்னையின் முக்கிய நகர்ப்புற நீர்நிலைகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் ர் ஏரி, பல ஆண்டுகளாக மண் தேக்கம், நீர் சேமிப்பு திறன் குறைதல், நீர்தர பாதிப்பு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஏரியின் நீர் சேமிப்பு திறன் சுமார் 150 மில்லியன் லிட்டராக மட்டுமே இருந்தது.

இந்த நிலையை மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின் மூலம் ஏரியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, நீர் சேமிப்பு திறன் சுமார் 150 மில்லியன் லிட்டரிலிருந்து 300 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட மண்ணை பயன்படுத்தி ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்டதுடன், மழைநீர் வருகை மற்றும் நீர் சேமிப்பை மேம்படுத்தும் வகையில் ஷட்டர் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.

 

மேலும், ஏரி மற்றும் கால்வாய்களில் வெட்டிவேர், கன்னா உள்ளிட்ட தாவரங்கள் நடப்பட்டு இயற்கை சுத்திகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயிரினப் பன்மையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு உயிரியல் தீவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரி கரைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் விரிவான மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

திட்டத் தொடக்க விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. சரவணன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை மாநகராட்சி (தெற்கு) பிராந்திய துணை ஆணையர் திரு. அஃப்தாப் ரசூல், IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சென்னை வளர்ச்சி மைய தலைவர் திரு. அனில் குமார் P.N., மூத்த துணைத் தலைவர் திரு. நிலாத்ரி பிரசாத் மிஷ்ரா உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிறுதுளி அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுசீரமைப்பு பணிகளின் விளைவாக ஏரியின் நீர்தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு முன் மற்றும் பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 98 சதவீத நீர்தர முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

மேலும், ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர் மீள்நிரப்புதல் திறன் மேம்பட்டு, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் மற்றும் நீர்தரம் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினப் பன்மை பாதுகாப்பு, இயற்கை வாழ்விடம் உருவாக்கம் மற்றும் நகர்ப்புற பசுமை வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

நீர்வள மேலாண்மை, கழிவுநீர் கட்டுப்பாடு, உயிரினப் பன்மை பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்ட ஷோளிங்கநல்லூர் ஏரி மறுசீரமைப்பு திட்டம், நகர்ப்புற நீர்நிலை பாதுகாப்பில் ஒரு முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற உறுதுணையாக இருந்த இன்ஃபோசிஸ் லிமிடெட், சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, அரசு துறைகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறுதுளி அமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

தேசிய ஹேக்கத்தானில் கல்லூரி மாணவர்கள் சாதனை

Published

on

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) மற்றும் அதே அமைச்சகம் ஆகியவை, கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவுடன் (Innovation Cell) இணைந்து, “STATATHON – A Data Journey for Viksit Bharat” (விக்சித் பாரதத்திற்கான தரவுப் பயணம்) எனும் தேசிய அளவிலான ஹேக்கத்தான் (hackathon) போட்டியை ஏற்பாடு செய்தன. இதன் 36 மணிநேர இறுதிச் சுற்று, 2026 ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ‘மானவ் ரச்னா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நிறுவன’ (MRIIRS) வளாகத்தில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தீர்வுகள் மூலம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நாடு முழுவதிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 5,000 ஆரம்பக்கட்டத் திட்டங்களில் இருந்து, 36 மணிநேரம் நடைபெறும் கோடிங் மற்றும் புத்தாக்கப் போட்டியான ‘STATATHON 2026’ இன் இறுதிச் சுற்றுக்கு 25 அணிகள் (21 கல்வி நிறுவனங்கள் மற்றும் 4 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்று, தானியக்கத்தின் மூலம் கணக்கெடுப்புத் தரவுகளின் புள்ளிவிவரச் செயலாக்கத்தில் ஈடுபடும் நேரத்தையும் முயற்சியையும் குறைத்து, நம்பகமான மதிப்பீடுகளையும் பகுப்பாய்வு அறிக்கைகளையும் விரைவாக உருவாக்குவதற்கான ஒரு தீர்வை முன்வைத்தனர்.

 

அவர்கள் கணக்கெடுப்புத் தரவுத் தொகுப்புகளில் (Survey Datasets) SQL வினவல்களை இயக்கி, அதன் முடிவுகளை JSON போன்ற பயனர்-நட்பு வடிவத்தில் பெறுவதற்கான ஒரு API நுழைவாயிலை (API gateway) உருவாக்கினர்; இதற்காக நேற்று (18.06.2026) ரூ. 50,000 ரொக்கப் பரிசுடன் கூடிய இரண்டாம் பரிசை வென்றனர்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் டாக்டர் பி.எல். சிவகுமார் ஆகியோர் மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி

Published

on

கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர்.

இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21, 2026 வரை கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டல் பை ஐடிசியில் நடைபெறுகிறது. தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, பார்வையாளர்களை நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன் ஸ்டடெட் கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்பு அமைகிறது.

கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், உங்கள் பழைய தங்கத்தை எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளுக்கு 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. (*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.)

இந்த கண்காட்சி, நகை ஆர்வலர்கள், தனிஷ்கின் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஒரே மேடையில் இணைத்து, இயற்கை வைரங்களின் அருமை மற்றும் புதுமையான வடிவமைப்புகளின் சிறப்பை கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நகைப் பிரிவு பிராந்திய கிளஸ்டர் மேலாளர் திரு. சந்தோஷ், தனிஷ்க் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் ,

“இந்த பிரத்யேக கண்காட்சியின் மூலம் கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களின் சிறந்த இயற்கை வைர நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நேர்த்தியான கைவினைத் திறன், புதுமையான வடிவமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும் நகைகளை வழங்குவதே எங்களின் நோக்கம். கோயம்புத்தூர் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். இங்கு வாடிக்கையாளர்கள் அளித்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இயற்கை வைரங்களின் அழகையும், ஒவ்வொரு நகையின் பின்னணியில் உள்ள தனித்துவமான கதைகளையும் அவர்கள் பெரிதும் பாராட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் தனிஷ்க் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது,” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Published

on

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா 17.06.2026 (புதன்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந் தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

40 ஆண்டுகால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரியர்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார். விழாவில் 2, 250 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending