அரசியல்

காலில் விழ வைத்து தீண்டாமை -டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Published

on

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
வாளரக்குறிச்சியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரின் மகளுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலத்தின்போது ஆதிக்க சாதியினர் தெருவில் பட்டாசு வெடித்ததாகவும், அங்கிருந்த கடையில் பட்டியலினத்தவர் புகைப்பிடித்ததற்காகவும் திமுக நிர்வாகி உள்ளிட்டோர் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தைக் காக்க வேண்டிய உள்ளூர் போலீசார், இந்த விவகாரத்தில் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதுடன், காவல்நிலையத்தின் முன்பே திமுக நிர்வாகி உள்ளிட்ட சிலரது காலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த தீண்டாமை கொடூரமும் அரங்கேறியதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் நடைபெற்று 15 நாட்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு மிகவும் பொறுமையாக வழக்கு பதிவு செய்து ஒருவரைக் கைதுசெய்ததுடன், தலைமறைவான திமுக நிர்வாகியைத் தேடி வருவதாக கூறுவது அபத்தமான செயலாகும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திமுக நிர்வாகிகள் இது போல தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக கட்சித்தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், இது போன்ற சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருப்பது பட்டியலின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலினத்தவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகின்றேன்.
என சமூக ஊடகத்தின் வாயிலாக டிடிவி தினகரன்  தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்

Click to comment

Trending

Exit mobile version