முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவரான எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ., அவர்கள், புதியதாக திறக்கப்பட்ட அவிநாசி சாலையின் 10.1 கி.மீ. உயர்தர ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைமேம்பாலம் பார்வையிட்டார்.
செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி
“கோவைக்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஏற்பட்டது. அவினாசி சாலையில் மக்கள் கடுமையாக நெரிசலால் அவதியடைந்ததால், அங்கு மேம்பாலம் கட்ட வேண்டுமென எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தோம்.
அப்போது மிகப்பெரிய நிதி தேவைப்பட்டதால், மாநில நிதியிலிருந்து ரூ.1621 கோடி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . அதிமுக ஆட்சிக்காலத்தில் 55 சதவீத பாலப்பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒன்றரை ஆண்டுகள் பணி நிறுத்தப்பட்டு, தாமதமாக இப்போது திறக்கப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல மேம்பாலங்கள், சாலைகள், பைபாஸ்கள் ஆகியவற்றை எடப்பாடியார் ஆட்சியில் தொடங்கி நிறைவேற்றியோம். ஆனால், தற்போதைய அரசு இன்னும் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பாலத்தை முடிக்கவில்லை,” என்றும் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் கோயம்புத்தூருக்கு வழங்கப்பட்ட முக்கிய மேம்பாலங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதில் ஆத்துப்பாளம் – உக்கடம் மேம்பாலம் (₹479 கோடி), காந்திபுரம் இரட்டை அடுக்கு மேம்பாலம் (₹194 கோடி), திருச்சி சாலை மேம்பாலம் (₹253 கோடி), கவுண்டம்பாளையம் மேம்பாலம் (₹66 கோடி), பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் (₹86 கோடி) உள்ளிட்டவை அடங்கும். மேலும், ஆத்திகடவு – அவிநாசி திட்டம் இரண்டாம் கட்டம், சிங்காநல்லூர் மேம்பாலம், லாலி சாலை மேம்பாலம் ஆகியவற்றையும் இ.பி.எஸ். அரசு அறிவித்திருந்தது என அவர் நினைவூட்டினார்.
மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து அவர், “இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஜி.டி. நாயுடு கோவையின் பெருமை; அவரின் பெயர் கோவையின் அடையாளமாக திகழும்,” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “புதிய மேம்பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டு கேமராக்கள் பொருத்தி, சரியான டைவர்ஷன் ஏற்பாடு செய்து, விபத்துகள் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக, “இனி வரும் காலத்தில் சரவணம்பட்டி பாலம், அவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைப்பு உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.