செய்திகள்

பித்தலாட்ட நாடகம் எடுபடாது..!- EXIT POLL குறித்து இ.பி.எஸ் கருத்து

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியானதை அடுத்து அதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திமுகவின் பித்தலாட்ட நாடகம் எடுபடாது என்றும், அதிமுக ஆட்சி நிச்சயம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் “தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் பொய் தகவல்களை பரப்பி, தமிழக மக்களையும், நம் கழகத் தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை, தில்லுமுல்லு முன்னேற்றக் கழகத்தினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை.“ என்று கூறியுள்ளார்.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தை இரும்புக் கோட்டையாக மாற்றிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, ஆகிய இருபெரும் காவல் தெய்வங்கள் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரான கருத்துக் கணிப்புகளை கண்டு யாரும் மனம் தளர வேண்டாம். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் உடைத்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

“2006 முதல் 2011 வரையிலான மைனாரிட்டி திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, 2011 ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அச்சமயம் சில கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என்றது; சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே அஇஅதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன. அதுகுறித்து புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்டபோது, “218 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்கள். சொன்னபடியே அஇஅதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்று, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். அந்தத் தேர்தலில் திமுக 23 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கப்பெறாமல் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டது.“ என இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, “2016-லும் இதேபோன்று கருத்துக் கணிப்பு சொல்லப்பட்டது. அதை பொய்யாக்கி மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைத்தது. இது தான் வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் நம் கழகத்தின் தனித் தன்மை. இந்தத் தேர்தலிலும் அத்தகைய வெற்றி கண்டிப்பாக தொடரும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 210 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.“ என்று கூறியுள்ளார்.

“அதேநேரம், ‘தோற்கப்போகிறோம்’ என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான கருத்துக் கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதற்கு பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, திமுக வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் திமுக-வினர் முயற்சி செய்வார்கள். எனவே, 4.5.2026-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் நம் கழகத் தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்டுகள், வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.“ என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “தமிழ் நாட்டில் மக்கள் விரோத, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி ஒருபோதும் அமையப்போவதில்லை. மக்களின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் மட்டுமே அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயம் மலரும்.“ என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Click to comment

Trending

Exit mobile version