மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை போன்ற சுகாதார நிறுவனங்கள், இந்தத் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதில் அபூர்வமான பங்காற்றியுள்ளன என்று இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்னிழா விழாவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவும் இணைந்து பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.கோயம்புத்தூர் கொடிசியாவர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
இந்த விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். சுந்தர் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவர் விழா அரங்கிற்கு வந்தபோது, திருமதி பிரியங்கா சுந்தர் அவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.விழாவின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான லோகோவை துணைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினர் உரையையும் நிகழ்த்தினார்.இதில் பேசிய, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , கடந்த 50 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மேற்கொண்ட பயணம் மகத்தானதும் பெருமைக்குரியதுமாக இருப்பதாக தெரிவித்தார். மேற்கு தமிழ்நாடு பகுதியில் மருத்துவ சுற்றுலாவளர்ச்சிக்கு முன்னோடியாக செயல்பட்டதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பெரும் பாராட்டு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ நிறுவனங்களுக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. ஒன்று, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பது; மற்றொன்று, எதிர்காலத்தில் நோயாளிகளை பாதுகாக்கும் திறமையான மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது. எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள், இந்த இரு பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.