Uncategorized

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை!

Published

on

கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூறியதாவது :

கடந்த 9 ஆண்டுகளாக ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுவருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருவதாகவும் தெரிவித்தனர்.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பாதகங்களை குவித்துள்ளனர்.

ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், ஈக்வைன் ட்ரீம்ஸ் வீரர்கள் தங்களது நுட்பமான துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
மிக இளம் வயதினராக இருந்தபோதிலும், மைதானத்தில் அவர்கள் காட்டிய தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் அவர்கள் போட்டியை எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டது.

இவர்களின் இந்த வெற்றி, தனிப்பட்ட திறமையை மட்டுமின்றி, ஈக்வைன் ட்ரீம்ஸ் வழங்கிய கடுமையான பயிற்சி மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை வீரர்களின் அர்ப்பணிப்பு, அதிகாலை நேரப் பயிற்சிகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குழுவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், தமிழக இளம் விளையாட்டு வீரர்களிடையே குதிரையேற்ற விளையாட்டு அதிகரித்து வருவதையும், தேசிய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு கூடி வருவதையும் இந்தப் பதக்கங்கள் பறைசாற்றுகின்றன.

இந்த வெற்றியின் மூலம் ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் எதிர்காலப் போட்டிகளுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய சக்தி பாலாஜி மற்றும் பாரதி, குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவதிலும், பதக்கங்களை குவிப்பதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை ஈக்வைன் ட்ரீம்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருவதாக அவர்கள் கூறினர்.

Click to comment

Trending

Exit mobile version