பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.
நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.
திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.
இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.
அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.