அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலின் சதத்துக்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜாவும் தனது 6வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து, 286 ரன்கள் என்ற இமாலய முன்னிலைப் பெற்றுள்ளது.
ராகுல், ஜுரல், ஜடேஜா சதம்
இரண்டாவது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் சதம் (100), கேப்டன் சுப்மன் கில் அரைசதம் (50) அடித்து இந்திய இன்னிங்ஸை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், துருவ் ஜுரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. அனுபவம் மிக்க வீரரைப் போல ஜுரல் தனது 125 ரன்களால் ரசிகர்களை கவர, ஜடேஜா அதிரடி ஆட்டத்தில் வேகமாக ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜுரல் 125 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜடேஜா தொடர்ந்து தாக்குதல் நடத்தினார். 126வது ஓவரில் ஜோமல் வாரிக்கன் வீசிய பந்தை சிங்கிள் எடுத்து தனது 6வது டெஸ்ட் சதத்தை எட்டினார். வழக்கம்போல் தனது ‘வாள் சண்டை’ கொண்டாட்டத்தால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இன்னிங்ஸ் தோல்வி நெருங்கும் வெஸ்ட் இண்டீஸ்
இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 448/5 என வலுவான நிலையில் இருந்தது. ஜடேஜா 104 ரன்களுடனும் (*), வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தனர்.
முதல் இன்னிங்ஸிலேயே 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது 286 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய பந்துவீச்சை சமாளித்து இமாலய இலக்கை எட்டுவது சாத்தியமற்ற காரியமாகவே தோன்றுகிறது. எனவே, இந்தப் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்து, இந்திய அணி ஒரு பிரம்மாண்டமான இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.