குஜராத்: உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் என்று குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பவநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா தற்சார்பு அடைய வேண்டும்,அதற்கான தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை நமது ஒரே உண்மையான எதிரி என்பது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப் பெரிய எதிரி. நாம் ஒன்றாக இந்த எதிரியை தோற்கடிக்க வேண்டும்.
வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வி அதிகமாகும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை பேணுவதற்கு தற்சார்பு அவசியம். சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் நாம் தயாரிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து மட்டுமே உள்ளது. தன்னம்பிக்கையே அந்த மருந்து.
நம் ஆயுதங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு நிலவுகிறது.தேசத்தின் முதுகெலும்பாக செயல்படுபவை நமது துறைமுகங்கள். இந்திய துறைமுகங்களுக்கு புதிய சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். ‘ஒரு தேசம், ஒரு ஆவணம்’ மற்றும் ‘ஒரு தேசம், ஒரு துறைமுக செயல்பாடு’ ஆகியவை வர்த்தகத்தை எளிதாக்கும்.
பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் கடல்சார் துறையை வலுப்படுத்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம். உலகளாவிய கடல்சார் சக்தியாக நாட்டின் துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன. என தெரிவித்தார்.