கோவை மண்டலத்தில் 8 மாதங்களில் 1.33 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றனர்.
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் நோக்கில், செப்டம்பர் 2008 முதல் அவிநாசி சாலையில் கோவை மண்டல பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
வெளிநாடு செல்ல தேவையான முக்கிய ஆவணமாகக் கருதப்படும் பாஸ்போர்ட் பெற, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு 1.87 லட்சம் பேருக்கும் அதிகமாக பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், 2024 இல் இது 1.92 லட்சமாக உயர்ந்தது. தற்போது, 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் இறுதிவரை (8 மாதங்களில்) 1.33 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
தினசரி சராசரியாக 1,070 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களும், கோடை மற்றும் சுற்றுலா சீசன்களில் வெளிநாடு பயணிக்கும் மக்களும் அதிகமாக விண்ணப்பிப்பதால், எண்ணிக்கை உயரும் நிலையில் உள்ளது. கோடை காலங்களில் விண்ணப்பிப்பவர்களில் சுமார் 50% சிறுவர், சிறுமியரே எனவும் கூறப்படுகிறது.
மேலும், இவ்வாண்டில் மட்டும் கோவை மண்டலத்தைச் சேர்ந்த 64,000க்கும் அதிகமானவர்கள் இ-பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.