Uncategorized

பத்து இலட்சம் மரங்களைக் கடந்து சிறுதுளி அமைப்பு சாதனை படைத்துள்ளது!

Published

on

சிறுதுளி அமைப்பானது 23 வருடங்களாக, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னிறுத்தி, சிறுதுளி சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் தாலுகாவில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பு, ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிதி உதவியுடன் 10,000 மரக்கன்றுகளை ‘பெரியம்மன் கோவில் வனம்’ என்ற திட்டத்திலும், புல் மெஷின்ஸ் பிரைவேட் நிதி உதவியுடன் 7500 மரக்கன்றுகளை ‘கே.பி.கே. வனம்’ என்ற திட்டத்திலும் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளம் அதிகரிக்கும் நோக்கில் முக்கியமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி அன்னூர் பகுதியில் பசுமை வளத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமூக பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு நிகழ்வில், முதன்மை விருந்தினராக திரு. சங்கேத் பல்வந்த் வாகே, இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் சிறப்பு விருந்தினராக  உஷா நந்தினி, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையர் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். மேலும் ஜே.எஸ் ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா தனியார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (நிதி துறை) ஷ்ரவன் சேனாபதி, புல் மெஷின்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சிறுதுளி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விழாவின் சிறப்பு பங்கேற்பாளர்களாக உள்ளூர் பங்குதாரர்கள், நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியின் 30 மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) மற்றும் எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து (மேலாண்மை ஆய்வுகள் துறை) 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இத்திட்டங்களுடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு மொத்தமாக 10,00,000 மரங்களை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 இடங்களில்  நடவு செய்யப்பட்டு பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இத்தகைய பசுமைத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர், நீர்வளத்துறை, வனத்துறை, கோவை மக்கள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிதி ஆதரவாளர்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாகவே இச்சாதனையை சிறுதுளி அமைப்பு செய்துள்ளது.

Click to comment

Trending

Exit mobile version