கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வரும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, நீலகிரியில் உள்ள ப்ரொவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் கணினி மற்றும் தரவு அறிவியல் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் புதிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.இந்த முன்னெடுப்பு நீலகிரி பிராந்திய மாணவர்களின் கற்றல் முறை மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதில் அறக்கட்டளை கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் உறுதிப்படுத்துகிறது.
இந்த புதிய வசதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “இத்தகைய டிஜிட்டல் கற்றல் தளங்கள் மாணவர்கள் கல்வியை அணுகும் முறையையே மாற்றியமைக்கும். பாடப்புத்தகங்களைத் தாண்டி செய்முறை விளக்கம் மற்றும் நேரடி அனுபவம் மூலம் மாணவர்கள் கற்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்விக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. இது நீலகிரியின் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாகும்,” என்று குறிப்பிட்டார்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ப்ரொவிடன்ஸ் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மேம்பாட்டில் ஒரு தரவு ஆய்வகம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஸ்டுடியோ ஆகியவை அடங்கும்.மாணவர்கள் தரவு பகுப்பாய்வு திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நவீன டிஜிட்டல் கருவிகளை நிஜ உலகச் சூழல்களில் பயன்படுத்தவும் இது உதவும்.இதன் மூலம் மாணவர்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நேரலையில் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற முடியும்.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, கல்லூரி பேராசிரியர்களும் இந்த வசதிகளை அன்றாடக் கற்பித்தலில் சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகளும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் கல்விப் பணிகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதை மைக்ரோலேண்ட் அறக்கட்டளை உறுதி செய்கிறது.
கல்லூரி முதல்வர் டாக்டர் சிஸ்டர் வி.ஜே. ஷீலா பேசுகையில், “மைக்ரோலேண்ட் அறக்கட்டளையுடனான எங்களது முந்தைய உறவு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மூலம் பலருக்கு உதவியது. தற்போது இந்த டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அன்றாட கற்றல்-கற்பித்தல் முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்,” என்றார்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் கல்பனா கர் கூறுகையில், “நீலகிரி பிராந்தியத்தில் நீண்டகால அடிப்படையில் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். சமூகத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியே இந்தத் திட்டமாகும்,” என்று தெரிவித்தார்.புவியியல் அமைப்பு கல்விக்கான தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, நீலகிரி சமூகத்தின் எதிர்காலத் தேவைகளுக்கான திறன்களை வளர்ப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது