குழந்தைகளை பாதிக்கும் டைப்–1 நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, 3-வது ஆண்டு ‘கிட்-அ-தான்’ (Kid-A-Thon) என்ற மாரத்தான் நிகழ்வை சிறப்பாக நடத்தின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் – தாமஸ் பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில், டைப்–1 நீரிழிவு நோயுடன் போராடும் சில குழந்தைகள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உற்சாகமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நடைப்பயணத்தை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் திரு. சரவண சுந்தர், ஐ.பி.எஸ், ராசி சீட்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன்,இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,காம்பாட் டயாபடீஸ் திட்ட இயக்குநரும் கிட்-அ-தான் தலைவருமான ரோட்டேரியன் ரேஷ்மா ரமேஷ், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் தலைவர் ரோட்டேரியன் மகேஷ் பிரபு, செயலாளர் ரோட்டேரியன் சுஜய் ஷ்ரோஃப்,
ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நடைப்பயணத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூர்வஜித் எஸ். கிருஷ்ணன்,
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி முழுவதும் இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள டைப்–1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.மேலும், இன்சுலின் பம்புகள், மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட அவசியமான மருத்துவ உதவிகளை ரோட்டரி இ–கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து வழங்கி வருவதாக கூறினார். டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில்,டைப்–1 நீரிழிவு நோய் என்பது தன்னைத்தானே தாக்கும் (Autoimmune) நோய் ஆகும் என்றும், இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிப்பதாகவும் கூறினார்.உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் இன்சுலின் சுரக்கும் செல்களை தாக்கும்போது இந்த நோய் உருவாகிறது.
குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக இரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்து மருத்துவரை அணுக வேண்டும் என பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.மேலும், டைப்–1 நீரிழிவு நோயுடன் போராடும் குழந்தைகள் இன்சுலின் தவறாமல் எடுத்துக் கொண்டால் சாதாரண வாழ்க்கை நடத்த முடியும்.
இன்சுலின் தவிர்த்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வை ரோட்டேரியன் ரேஷ்மா ரமேஷ், ரோட்டேரியன் மகேஷ் பிரபு மற்றும் ரோட்டேரியன் சுஜய் ஷ்ரோஃப் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும்
பதக்கங்கள்,உணவுப் பொருட்களுடன் கூடிய பரிசுப் பைகள், மோர் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.