அமெரிக்காவில் உலகளவில் பெரும் புகழ் பெற்ற மல்யுத்தப் போட்டிகளில் ஒன்றான WWE-யின் பிரபல நட்சத்திர வீரர் ஜான் சீனா, இன்று நடைபெற்ற தனது கடைசி மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு, அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.
இந்த முக்கியமான இறுதிப் போட்டியில், ஜான் சீனா கன்தர் (Gunther) என்பவரை எதிர்த்து மோதினார். கடுமையான போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டேப் அவுட் (Tap Out) முறையில் ஜான் சீனா தோல்வியடைந்தார். இதனையடுத்து, ரசிகர்களின் கைதட்டல்களும் உணர்ச்சி வெள்ளமும் மத்தியில் அவர் மல்யுத்த அரங்கில் இருந்து விடைபெற்றார்.
23 ஆண்டுகளாக WWE மல்யுத்த உலகில் சிறப்புடன் விளங்கிய ஜான் சீனா, தனது விளையாட்டு வாழ்க்கையில் 17 முறை உலக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். WWE வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழும் ஜான் சீனா, தி ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்ட பல ஜாம்பவான்களுடன் நினைவில் நிற்கும் போட்டிகளில் மோதியுள்ளார்.
மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல், ஒழுக்கம், உழைப்பு மற்றும் மரியாதை (Respect) என்பவற்றை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்ட ஜான் சீனா, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பு WWE ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் சீனாவின் ஓய்வுடன், WWE மல்யுத்த உலகில் ஒரு பொன்னான காலகட்டம் நிறைவு பெற்றதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.