Sports

இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published

on

ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடைசி விக்கெட் வரை போராடி இந்திய ரசிகர்களுக்கு “மரண பயத்தை” காட்டினர். இறுதியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த ரோஹித் சர்மா 57 ரன்கள் மற்றும் விராட் கோலி 135 ரன்கள் சேர்த்து, ஜோடியாக 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்து அசத்தியது.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார்.
கேப்டன் கே.எல்.ராகுல் தனது பங்குக்கு 56 பந்துகளில் 60 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கினர்.

350 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் ரிஜான் ரிக்கல்டன் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். அர்ஷ்தீப் சிங் மார்க்ரமை (7) வெளியேற்ற, 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது.

மிரட்டிய ஜான்சன் – பிரீட்ஸ்கே கூட்டணி
3 விக்கெட்களுக்கு பின் டோனி டி சோர்ஸி 39 ரன்கள் சேர்த்தும், டெவால்ட் பிரேவிஸ் 37 ரன்கள் சேர்த்தும் ஆகியோர் அணியை மீட்டனர். ஆனால், 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இணைந்த மார்கோ ஜான்சன் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி ஆட்டத்தையே மாற்றியது.

குறிப்பாக மார்கோ ஜான்சன் இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். 39 பந்துகளில் 70 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். மறுமுனையில் பிரீட்ஸ்கே 72 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தபோது, இந்திய அணிக்குத் தோல்வி பயம் காட்டியது.

பதற்றம் அதிகரித்த நேரத்தில் பந்தை கையில் எடுத்த குல்தீப் யாதவ், ஒரே ஓவரில் ஜான்சன் மற்றும் பிரீட்ஸ்கே என இருவரையும் வீழ்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அவர் மொத்தம் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

விடாமல் போராடிய கார்பின் போஷ்
முக்கிய விக்கெட்டுகள் விழுந்தாலும், கடைசி நேரத்தில் எட்டாம் வரிசை வீரர் கார்பின் போஷ் தனி ஆளாகப் போராடினார். 51 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய அவர், கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா.

கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கார்பின் போஷ் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

Click to comment

Trending

Exit mobile version