கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு துறையில் செயல்படும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து “நான் உயிர் காவலன்” என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி பிரச்சாரமும் சமீபத்தில் கோவை மாநகரில் நடைபெற்றது.
இந்நிலையில், அனைத்து அரசு துறைகளும் இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார்:
-
பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.
-
விபத்துக்கு வழிவகுக்கும் குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் ஓரங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
-
விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
-
பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.
தற்போது கோவை மாநகரின் பல சாலைகளில் குழிகள் மற்றும் குறியீடு இல்லாத வேகத்தடைகள் காரணமாக விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மழை நீர் தேங்கும்போது அல்லது நிழல் படும்போது அவை வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
ஆட்சித்தலைவர் நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், கோவை சாலைகள் இனி பாதுகாப்பானதாக மாறுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.