அடுத்த மாதம் முதல் கோவையிலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்துக்கு நேரடி விமானசேவையை இண்டிகோ விமான நிலையம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அக்டோபர் 26ம் தேதி (26.10.25), இந்த சேவை துவங்கப்படும். இது இந்த 2 நகரங்களுக்கு இடையே வழங்கப்படும் முதல் இடைநில்லா சேவையாக பார்க்கப்படுகிறது. வாரம் 4 நாட்கள் ( செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு) இந்த சேவைகள் வழங்கப்படும்.
இந்நாட்களில் இந்த விமானம் கோவையிலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத்துக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும். அதேபோல அகமதாபாத்தில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 11:20 மணிக்கு வந்து சேரும்.
இந்த அறிவிப்பை வரவேற்பதாக மேற்கு தமிழகத்தின் முன்னணி தொழில்துறை அமைப்பான ‘கொங்கு குளோபல் ஃபோரத்தின் (Kongu Global Forum) இயக்குனர் சதிஷ் கூறினார்.
கோவை – அகமதாபாத் இடையேயான நேரடி விமான சேவை என்பது அடிக்கடி இந்த 2 நகரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கும், வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அவர் கூறினார்.
அதே சமயம் கோவையிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வுக்கு நேரடி விமான சேவை அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம் என அவர் கூறினார்