மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தையாவது அமைக்கவேண்டும் என சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முதல் கட்டமாக 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது என இன்று தகவல் வெளியானது.
முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் இவை அமையும் எனத் தெரியவருகிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கத் திட்டம் உள்ளதாக இன்று தகவல் வெளிவந்தது.
ஏற்கனவே கோவை மாநகரின் 10 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க கோவை மாநகராட்சி தயாராகி வரும் நிலையில், நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்கள் அமைந்தால் அது மின்சார வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பணிகள் விரைந்து நடைபெறவேண்டும் என்பதே மின்சார வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.