சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.
‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.
எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.