மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
புதிய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருப்பது மாநில ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளங்கி வந்த ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இத்தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக, முதல் நிலை விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக வீரர் நாராயண ஜெகதீசனுக்கும் இடம் கிடைத்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஜெகதீசன், சமீபத்திய துலீப் போட்டியில் முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் குவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் எடுத்திருந்தார். அவரின் சிறப்பான பார்மை கருத்தில் கொண்டு இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சனும் அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிராக அவர் 73 ரன்கள் அடித்திருந்தார். இதனால் செட்ஜர் புஜாராவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அனுபவம் வாய்ந்த ஆஃப்ஸ்பின்னர் ஆர். அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்ப உள்ளார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் – நாராயண ஜெகதீசன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் – ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.